உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது ஆனால் ஆஸ்திரேலியா தரமான அணி - மைக்கேல் பெவன்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது என்றாலும் அதற்கு சவாலை கொடுக்க ஆஸ்திரேலியாவும் தரமான அணியாக உள்ளது. இவ்விரு அணிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிக்கும் அணிக்கு கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
" உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது சிறப்பான சாதனையாகும். அது அடிக்கடி நடைபெறாத ஒன்றாகும். இம்முறை நமக்கு சிறப்பாக விளையாடி டாப் பார்மில் இருக்கும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் திறமை கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். இருப்பினும் ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன்
மறுபுறம் இந்தியா வெற்றி பெறுவதற்கு தெளிவான வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவும் 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே யார் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இரு அணிகளுமே பேட்டிங்கில் நல்ல அணிகளாக இருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா இத்தொடரில் மெதுவான துவக்கத்தை பெற்றாலும் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளனர்."
இவ்வாறு அவர் கூறினார்.