ஆசிய கோப்பை; இந்திய மிடில் ஆர்டர் பலவீனமானது; பாகிஸ்தானுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் - பாக்.முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை; இந்திய மிடில் ஆர்டர் பலவீனமானது; பாகிஸ்தானுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் - பாக்.முன்னாள் வீரர்
x

Image Courtesy: @ICC

ஆசிய கோப்பை தொடர் ( 50 ஓவர் ) வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.

கராச்சி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்ட ராகுல், ஸ்ரேயஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது.

எனவே இந்த தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பவர் பிளேயில் கொஞ்சம் மெதுவாக ஆடுவார்கள். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் இல்லை. ஆனால், பவர்பிளே பந்துவீச்சில் நாம் அபாரமாக திகழ்கிறோம்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் 11வது முதல் 40வது ஓவர் வரை விக்கெட் எடுக்க தடுமாறுகிறோம். ஷதாப், நவாஸ் ஆகியோர் விக்கெட் எடுக்க தடுமாடுகின்றனர். மிடில் ஓவர்களில் ரோகித், கோலி ஆகியோர் நிலைத்து நின்றுவிட்டால் பாகிஸ்தானுக்கு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது.

ஏனெனில், இருவருமே பெரிய ஸ்கோர்களை எடுப்பவர்கள். நம் டாப் ஆர்டர் வீரர்களை விட கோலி, ரோகித் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவார்கள். இது இந்தியாவுக்குச் சாதகம்.

ஆனால், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பலம் அவர்களது பந்துவீச்சு. வேகப்பந்து வீச்சில் பெரிய பலம் உள்ளது. ஆனால், பந்துகள் திரும்பும் ஸ்லோ பிட்ச்களில் வேகப்பந்து வீச்சின் முனைப்பு அழிக்கப்பட்டு விடும்.

பேட்டிங்கில் இமாம் உல் ஹக், பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான் ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். இவர்களுக்கு பின்னர் ஷாஹின் அப்ரிடி, சதாப் கான், முகமது நவாஸ் ஆட்டோமேட்டிக்காக தேர்வு ஆவார்கள்.

ஆனால், இந்தியா மிடில் ஆர்டர் வரிசையில் திணறி வருகிறது. அந்த இடத்தில்தான் பாகிஸ்தானுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். மற்ற அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story