இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று இந்தூரில் 3-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.
இந்தூர்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்தது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முந்தைய போட்டிகள் போன்று இந்த ஆடுகளமும் முழுமையாக சுழற்பந்து வீச்சுக்கே உகந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு டெஸ்டில் பட்டையை கிளப்பிய இந்திய சுழல் சூறாவளிகள் ரவீந்திர ஜடேஜா (2 டெஸ்டில் 17 விக்கெட்), அஸ்வின் (14 விக்கெட்) ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த ஆயத்தமாக உள்ளனர்.
அதே சமயம் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் (158 ரன்) பிரமாதப்படுத்தினாரே தவிர, பந்து வீச்சில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய டெஸ்டில் அவரும் சுழல் வித்தை காட்டினால், எதிரணியின் நிலைமை இன்னும் திண்டாட்டம் தான்.
பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், நடப்பு தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தவிர வேறு யாரும் சதம் அடிக்கவில்லை. முன்னாள் கேப்டன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு டெஸ்டில் சதமே அடிக்கவில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை இந்த போட்டியிலாவது தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
குறிப்பாக முன்னணி பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களான அக்ஷர் பட்டேல் (2 அரைசதத்துடன் 158 ரன்), ஜடேஜா (96 ரன்), அஸ்வின் (60 ரன்) ஆகியோர் தான் பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பு வழங்கி வியக்க வைத்துள்ளனர்.
இந்த டெஸ்டின் முடிவு இந்தியாவுக்கு மூன்று வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தூர் போட்டியிலும் இந்தியா வெற்றியை சுவைக்கும் பட்சத்தில், ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். தொடரும் வசமாகி விடும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 'நம்பர் ஒன்'இடத்துக்கு முன்னேறி மூன்று வடிவிலான போட்டியிலும் ஒரே சமயத்தில் 'நம்பர் ஒன்' அந்தஸ்தை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பெறும்.
ஒரு வேளை இந்த டெஸ்டில் தோல்வியை தழுவினாலும் பிரச்சினை இல்லை. 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை உருவாகும். அழுத்தமும் அதிகரிக்கும். அந்த சிக்கலை தவிர்க்க 3-வது டெஸ்டிலேயே வாகை சூடி விட வேண்டும் என்பதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.