கடந்த ஆசிய கோப்பையில் "இந்தியா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை": வாசிம் அக்ரம்


கடந்த ஆசிய கோப்பையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை: வாசிம் அக்ரம்
x

ஆசிய கோப்பை 2023-ல் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.

லாகூர்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இரு அணிகளும் ஒன்றுக்கொன்று இரண்டு முறை சந்தித்தன. அதில் லீக் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை வெளியேற்றியது. இறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் வரவிருக்கும் ஆசிய கோப்பையைப் பற்றி விவாதிக்கும் போது, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், கடந்த ஆண்டு இந்திய அணியின் வெளியேற்றம் குறித்து பேசினார். அதில்,

"கடந்த முறை நாங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இறுதிப் போட்டியை கணித்திருந்தோம், ஆனால் தொடரில் இலங்கை வென்றது. மூன்று அணிகளும் ஆபத்தானவை - யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம். மற்ற அணிகளையும் குறைத்து மதிப்பிட கூடாது. கடந்த முறை இந்தியா தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை" என்று கூறினார்.

மேலும் "இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதட்டங்கள் இருந்தபோதிலும், இரு தரப்பு மக்களும் ஒருவரையொருவர் மதிக்கும் வகையில் விளையாட்டு அமைய வேண்டும். அரசியலும் விளையாட்டும் ஒன்றையொன்று தவிர்த்து இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். மக்களிடையேயான தொடர்பு மிகவும் முக்கியமானது. சராசரி இந்தியரும் பாகிஸ்தானியரும் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்" என்றும் கூறினார்.

ஆசிய கோப்பை தொடரின் தொடக்க போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் நாளை மோத உள்ளன.


Next Story