ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்


ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
x

image courtesy: BCCI Women twitter

ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

போட்செப்ஸ்ட்ரூம்,

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதில் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, கிரேஸ் ரீவென்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்றில் 3 வெற்றி, சூப்பர் சிக்ஸ் சுற்று பிரிவில் (குரூப் 1) 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ரன்-ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரைஇறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 3 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

இந்திய அணியில் பேட்டிங்கில் சுவேதா செராவத், ஷபாலி வர்மா, சவுமியா திவாரி, ரிச்சா கோஷ்சும், பந்து வீச்சில் பார்ஷவி சோப்ரா, மன்னட் காஷ்யப்பும் நல்ல நிலையில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் கிரேஸ் ரீவென்ஸ், லிபெர்டி ஹிப், அலெக்சா ஸ்டோன்ஹவுஸ்சும், பந்து வீச்சில் ஹன்னா பாகெர், எல்லி ஆண்டர்சன்,சோபியாவும் வலுசேர்க்கிறார்கள். இரு அணிகளும் வலுவாக விளங்குவதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story