இந்தியாவுக்கு புதிய சேவாக் கிடைத்துள்ளார்: ஜெய்ஸ்வாலை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்


இந்தியாவுக்கு புதிய சேவாக் கிடைத்துள்ளார்: ஜெய்ஸ்வாலை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது 2வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. .

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறிய ஜெய்ஸ்வால் களமிறங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார்.

இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 445 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலையுடன் இருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி , இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதியில் அந்த அணி 39.4 ஓவர்களில் 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரட்டை சதமடித்த இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வாலை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டி உள்ளார். மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்தியாவுக்கு புதிய சேவாக் கிடைத்துள்ளார். ஜெய்ஸ்வால், சேவாக் செய்ததைப் போலவே அனைத்து வடிவங்களிலும் பல தாக்குதல்களை அடித்து நொறுக்கும் வீரர். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Next Story