உலகிலேயே இந்தியா வித்தியாசமானதாக இருக்கிறது - டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் கருத்து


உலகிலேயே இந்தியா வித்தியாசமானதாக இருக்கிறது - டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் கருத்து
x

image courtesy: IPL

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் அரை சதம் அடித்து அசத்தினார்.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசர் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் உலகில் வேறு எங்கும் பார்க்காத அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை திருவிழாபோல் கொண்டாடுவதாக ஜேக் பிரேசர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"கடந்த 5 - 6 ஆட்டங்களில் ஓரங்கட்டப்பட்ட எனக்கு புதிய பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டை அதிகமாக சுற்றாமல் பந்தை நடுப்பகுதியில் கண்டுபிடித்து அடித்தேன். கடந்த 12 மாதங்களாக அதை செய்ய முயற்சித்து வருகிறேன். கவர்ஸ் திசைக்கு மேலே அடித்த ஷாட் எனக்கு பிடித்தது. ஆப் சைடுக்கு மேலே அடிப்பதை விட சிறந்த ஷாட் எதுவுமில்லை.

பவர் பிளேவுக்கு வெளியே பேட்டிங் செய்ய தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். இந்தியாவில் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இந்த நாடு வித்தியாசமானதாக இருக்கிறது. இதைப்போல் எங்கும் பார்த்ததில்லை. இதற்கு முன் கேள்விப்பட்ட நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். இன்னும் 8 வாரங்கள் இங்கே இருக்கப்போவது சிறப்பானதாகும்" என்று கூறினார்.


Next Story