உலகக் கோப்பைக்கு முன்னதாக பீல்டிங் துறையில் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து


உலகக் கோப்பைக்கு முன்னதாக பீல்டிங் துறையில் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து
x

பீல்டிங் துறையில் இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது இந்தியாவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:-

இந்த அணியுடன் கடந்த 6 -7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5-வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் பீல்டிங் துறையில் இப்போதில் இருந்தே இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பீல்டிங் துறையில் இந்திய அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏனெனில் பீல்டிங்கில் மிச்சப்படுத்தும் 15- 20 ரன்கள் வெற்றியில் உங்களை காப்பாற்றும். இல்லையேல் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதலாக 15 - 20 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். குறிப்பாக இலங்கை பீல்டிங் துறையில் சிறப்பாக செயலபட்டதால் தான் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story