இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி நிச்சயம் வேண்டும் - ஸ்ரீகாந்த்


இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி நிச்சயம் வேண்டும் - ஸ்ரீகாந்த்
x

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

சென்னை,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர்.

ஆனால் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-

"விராட் கோலி இல்லாமல் டி20 உலகக்கோப்பை அசாத்தியமற்றது. அவர்தான் நம்மை 2022 டி20 உலகக்கோப்பை செமி பைனல் அழைத்துச் சென்றார். அவர் கடந்த உலகக்கோப்பையின் தொடர்நாயகன். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன.

இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்க வேண்டும். எந்த உலகக் கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100 சதவீதம் கண்டிப்பாக அவர் தேவை. 2011இல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்" என்று கூறினார்.


Next Story