உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள லீக் போட்டிக்கான தேதி மாற்றம்...?


உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள லீக் போட்டிக்கான தேதி மாற்றம்...?
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 26 July 2023 8:55 AM IST (Updated: 26 July 2023 10:12 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்ற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் தேதியான அக்டோபர் 15க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story