நியூசிலாந்தை சுருட்டி தொடரை கைப்பற்றிய இந்தியா: கேப்டன்கள் கருத்து


நியூசிலாந்தை சுருட்டி தொடரை கைப்பற்றிய இந்தியா: கேப்டன்கள் கருத்து
x

ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வசப்படுத்தியது.

ராய்ப்பூர்,

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்த மைதானத்தில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி இது தான். இரு அணியிலும் மாற்றமில்லை.

'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், இந்திய பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். ஓரளவு புற்கள் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பந்து சீறிப்பாய்ந்தது. பவுன்சுடன், ஸ்விங்கும் ஆனதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி கலங்கடித்தனர். முகமது ஷமியின் முதல் ஓவரிலேயே பின் ஆலென் (0) கிளீன் போல்டானார். தொடர்ந்து ஹென்றி நிகோல்ஸ் (2 ரன்), டேரில் மிட்செல் (1 ரன்), டிவான் கான்வே (7 ரன்), கேப்டன் டாம் லாதம் (1 ரன்) ஆகியோர் வரிசையாக நடையை கட்டினர். இதில் கான்வேவுக்கு பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவே ஒற்றைக்கையால் கேட்ச் செய்த விதம் சிலிர்க்க வைத்தது.

15 ரன்னில் 5 விக்கெட்

நியூசிலாந்து அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (10.3 ஓவர்) தாரைவார்த்து தள்ளாடியது. எதிரணி 20 ரன்னை தொடுவதற்குள் 5 விக்கெட்டுகளை இந்தியா அறுவடை செய்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 26-வது ரன்னில் 5-வது விக்கெட்டை வீழ்த்தியதே இந்த வகையில் இந்தியாவின் மிரட்டல் பந்து வீச்சாக பதிவாகியிருந்தது.

நியூசிலாந்து அணிக்கும் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மிக மோசமான தொடக்கமாக அமைந்தது. பரிதாபகரமான நிலைமையில் தவித்த அந்த அணியை சரிவில் இருந்து மீட்க பின்வரிசை வீரர்கள் போராடினார்கள். கிளென் பிலிப்ஸ் (36 ரன், 52 பந்து, 5 பவுண்டரி), மைக்கேல் பிரேஸ்வெல் (22 ரன்), மிட்செல் சான்ட்னெர் (27 ரன்) ஆகியோர் இரட்டை இலக்க பங்களிப்பு வழங்கி ஒரு வழியாக ஸ்கோரை 100-ஐ கடக்க வைத்தனர்.

34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 108 ரன்னில் சுருண்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் 3-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். மொத்தம் 7 ஓவர்களை மெய்டன்களாக வீசி அசத்தினர்.

இந்தியா வெற்றி

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 51 ரன்களில் ( 50 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். சுப்மன் கில் 40 ரன்களுடனும் (53 பந்து, 6 பவுண்டரி), இஷான் கிஷன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3 விக்கெட் சாய்த்த முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 7-வது ஒருநாள் தொடர் இதுவாகும்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.

'டாஸ்' ஜெயித்த பிறகு மறதியால் தவித்த ரோகித்

'டாஸ்' ஜெயித்தால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதா அல்லது பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதா என்பதை அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுடன் 'டாஸ்' போடுவதற்கு மைதானத்திற்கு வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் ஜெயித்ததும் திடீரென குழம்பிப் போனார். அதாவது அணி நிர்வாகம் என்ன சொல்லி அனுப்பியது என்பதை சட்டென்று மறந்து விட்டார். நாங்கள் முதலில்.... நாங்கள்... என்று சில வினாடிகள் அவர் இழுப்பதை பார்த்து எதிரில் நின்ற நியூசிலாந்து கேப்டன் லாதம் சிரிக்க ஆரம்பித்தார். தலையில் கைவைத்து 10 வினாடிக்கு மேல் யோசித்த ரோகித் சர்மா பிறகு பந்துவீசுவதாக அறிவித்த போது, அவருக்கே தன்னுடைய மறதியை நினைத்து சிரிப்பு வந்து விட்டது. அதே சமயம் தாங்கள் டாஸில் வென்றிருந்தாலும் முதலில் பந்துவீச்சையே தீர்மானித்திருப்போம் என்று நியூசிலாந்து கேப்டன் லாதம் கூறினார்.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகுஇந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'கடந்த 5 ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே பொறுப்புணர்வுடன் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார்கள். இது போன்ற பந்துவீச்சை எல்லாம் வெளிநாட்டில் தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் உள்நாட்டிலும் சாதிக்கும் அளவுக்கு அவர்களிடம் திறமை இருக்கிறது. நான் சமீப காலமாக பெரிய ஸ்கோர் குவிக்கவில்லை என்பதை அறிவேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அணுகுமுறை தொடர்ந்து இதே மாதிரி தான் இருக்கும். விரைவில் அதிக ரன் எடுப்பேன்' என்றார்.

நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில், 'பேட்டிங்கில் எங்களது டாப் வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. இந்திய பவுலர்கள் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீசி நெருக்கடி கொடுத்தனர். எல்லா சிறப்பும் அவர்களையே சாரும். துரதிர்ஷ்டவசமாக எங்களால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க இயலவில்லை. ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப விளையாட தவறி விட்டோம்.' என்றார்.


Next Story