முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
x

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடக்கிறது.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விரைவில் நடக்க உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் மெகா போட்டிக்கு ஒரு சில வீரர்களை இறுதி செய்வதற்கு இந்த தொடர் உதவிகரமாக அமையும்.



சூர்யகுமார் யாதவ்

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடியில் கலக்கும் சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியில் பெரிய அளவில் ஜொலித்ததில்லை. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் 'டக்-அவுட்' ஆகி ஏமாற்றம் அளித்தார். மீண்டும் ரன்வேட்டைக்கு திரும்புவதற்கு இந்த தொடரை பயன்படுத்திக் கொள்வார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இடையே போட்டி நிலவுகிறது. மற்றபடி விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் என்று பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீசை பொறுத்தவரை இந்த தொடரால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஜிம்பாப்வேயில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் தோல்வி அடைந்து முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பறிகொடுத்தது. இதனால் உலகக் கோப்பை போட்டிக்கு சீரிய முறையில் தயாராக வேண்டும் என்ற டென்ஷன் அந்த அணிக்கு இல்லை. இழந்த பெருமையை மீட்கும் வகையில் சவால் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



ஹெட்மயர் வருகை

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டுள்ள ஹெட்மயர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் நன்றாக ஆடக்கூடியவர். 2 சதம் அடித்துள்ளார். கேப்டன் ஷாய் ஹோப், பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோமன் பவெல் ஆகியோரும் திறமையான பேட்ஸ்மேன்கள். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த அல்ஜாரி ஜோசப்புடன் இளம் படையினர் இணைகிறார்கள். சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி நெருக்கடி கொடுக்க முயற்சிப்பார்கள்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 139 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 70-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 4 ஆட்டத்தில் முடிவில்லை. 2 ஆட்டம் டையில் முடிந்தது. ஆனால் இவ்விரு அணிகள் சந்தித்த கடைசி 8 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

2006-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததில்லை. கடைசி 12 ஒரு நாள் தொடர்களை இந்தியாவே வசப்படுத்தி ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

மைதானத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு இங்கு நடந்த நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் ஒரு நாள் தொடரை அலசி பார்த்தால், 3 ஆட்டங்களிலும் முதலில் ஆடிய அணிகள் 190, 212, 301 ரன்கள் வீதம் எடுத்தன. வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டும் கைகொடுத்தது. ஆனால் அவை மூன்றும் பகல்-இரவு ஆட்டங்கள். தற்போதைய தொடர் உள்ளூர் நேரப்படி பகல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. அங்கு இன்று மழை பெய்வதற்கு 20 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகேஷ்குமார்.

வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், கேசி கர்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது ஆலிக் அதானேஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர், அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி அல்லது யானிக் காரியா அல்லது ஒஷானே தாமஸ், ஜெய்டன் சீலஸ்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.




Next Story