இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - இன்று கடைசி ஆட்டம்


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - இன்று கடைசி ஆட்டம்
x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. ஆனால் பேட்டிங்கில் 300 ரன்களுக்கு மேல் குவித்து அட்டகாசப்படுத்தினர். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் 97 ரன்கள் விளாசி ஹீரோவாக ஜொலித்தார். 2-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல் ஆகியோரும் அரைசதம் அடித்தனர். தொடரை முழுமையாக வெல்வதில் முனைப்பு காட்டும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை தோல்வி அடைந்தாலும் இரு ஆட்டங்களிலும் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் எடுத்ததே அவர்களுக்கு மகிழ்ச்சி தான். இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக தீவிரம் காட்டுவார்கள். அத்துடன் தொடர்ந்து 8 ஒரு நாள் போட்டிகளில் தோற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான் அல்லது பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ஷமார் புரூக்ஸ் அல்லது கீசி கார்டி, பிரான்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், அகில் ஹூசைன், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது கீமோ பால், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீலஸ், ஹைடன் வால்ஷ்.


Next Story