இந்திய அணி தோல்வி; அவர் ஏன் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை? ; ஆகாஷ் சோப்ரா கேள்வி


இந்திய அணி தோல்வி; அவர் ஏன் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை? ; ஆகாஷ் சோப்ரா கேள்வி
x

image courtesy; PTI

தினத்தந்தி 7 Aug 2023 12:02 PM GMT (Updated: 7 Aug 2023 12:23 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஏன் பந்து வீசவில்லை? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

கயானா,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் தலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து உள்ளார். அதில் அவர்,

''பூரன் களத்தில் இருந்த வரை ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கமே இருந்தது. ஆனால் பூரன் ஆட்டம் இழந்த பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாகல் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அவர் வீசிய 16வது ஓவரில், ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால் அதன்பின் கேப்டன் பாண்ட்யா சாகலை பந்து வீச அழைக்கவில்லை. அவருக்கு இன்னொரு ஓவர் மீதமிருந்தது. இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. டி20 போட்டியில் சேசிங்கில் 20-வது ஓவரை விட 19-வது ஓவர் முக்கியமானது. ஆனால் நேற்றைய போட்டியை பொறுத்த வரை 18-வது ஓவரும் முக்கியமானது தான். சாகல் 18 அல்லது 19-வது ஓவரை வீசியிருக்க வேண்டும். அதற்கு அவர் 100 சதவீதம் தகுதியானவர்" என்று கூறினார்.

மேலும் அவர் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் குறித்து கேள்வி எழுப்பினார்;

'போட்டியின் போது ஒரு ஓவர் கூட பந்து வீசாததால், அக்சர் பட்டேல் முற்றிலும் பேட்ஸ்மேனாக விளையாடுகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அவர் பந்துவீசப் போவதில்லை என்றால், அவர் ஏன் அணியில் விளையாடுகிறார்? முதல் டி20 போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அக்சர், இரண்டாவது போட்டியில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. அவர் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுகிறாரா?" என்று சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

பூரனின் ஆட்டத்தை சோப்ரா பாராட்டினார். பூரன் போன்று பேட்டிங் செய்யும் திறன் கொண்ட வீரர்கள் உலகில் அதிகம் இல்லை. நிக்கோலஸ் பூரன் தொடக்கத்தில் அடித்து ஆடி பின்னர் நிலைத்து நிற்க தொடங்குகிறார். இது ஒரு வீரராக அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை பறைசாற்றுகிறது. இந்திய அணியில் இந்த முறையில் ஆடக்கூடியவர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே. மற்றவர்களும் சிறந்தவர்கள். ஆனால் உலகில் இந்த வகையான திறமைகளை சில வீரர்கள் மட்டுமே கொண்டுள்ளனர். நிக்கோலஸ் பூரன் அவர்களில் ஒருவர்" என்று சோப்ரா பாராட்டியுள்ளார்.


Next Story