ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி- ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை.!


ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி- ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை.!
x

மற்றொரு கால்இறுதியில் பாகிஸ்தான் 68 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேரடியாக கால்இறுதியில் களம் இறங்கிய இந்திய அணி நேற்று நேபாளத்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி அணிக்கு அருமையான அடித்தளம் அமைத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 25 ரன்னிலும், அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சதத்தை எட்டியதுடன் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். 6-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய ஜெய்ஸ்வால் அடித்த முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் (வயது 21 ஆண்டு 279 நாள்) பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 23 வயதில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. கடைசி கட்டத்தில் ஷிவம் துபே (25 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிங்கு சிங் (37 ரன், 15 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரின் அதிரடியால் ஸ்கோர் 200-ஐ கடந்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 20 ஓவர்களில் நேபாள அணி 9 விக்கெட்டுக்கு 179 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் அவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், அறிமுக வீராக ஆடிய தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மற்றொரு கால்இறுதியில் பாகிஸ்தான் 68 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 161 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி 18.5 ஓவர்களில் 92 ரன்னில் சுருண்டது.

இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான்-இலங்கை (காலை 6.30 மணி), வங்காளதேசம்-மலேசியா (பகல் 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story