ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது - அருண் துமால் தகவல்


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது - அருண் துமால் தகவல்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று ஐ.பி.எல்.சேர்மன் அருண் துமால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் மாற்று ஏற்பாடாக 4 லீக் ஆட்டங்களை பாகிஸ்தானிலும், இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்திலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய யோசனையை முன் வைத்தது.

நீண்ட இழுபறிக்கு பிறகு இதற்கு ஒப்புதல் அளித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 4 லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட எஞ்சிய 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும் என்று அறிவித்தது. 6 அணிகள் இடையிலான இந்த ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தது. ஆனால் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு வந்து விளையாட இந்திய அணி மறுத்தால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தங்களுக்குரிய ஆட்டங்களை பொதுவான இடத்திற்கு மாற்றும்படி வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி இசான் மஜாரி எச்சரித்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு செல்வதில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகியும், ஐ.பி.எல். சேர்மனுமான அருண் துமால் கூறியுள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டியில்,

'டர்பனில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப்பும் சந்தித்து ஏற்கனவே ஆலோசித்தபடி ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை இறுதி செய்துள்ளனர். இதன்படி 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இந்தியா-பாகிஸ்தான் இரு மோதல் உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும். மேலும் இந்தியா- பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் 3-வது முறையாக சந்திப்பார்கள்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்திய அணியோ அல்லது கிரிக்கெட் வாரிய செயலாளரோ பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார்கள் என்று வெளியான தகவல் தவறானது. மேற்கண்ட சந்திப்பில் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை மட்டுமே இறுதி செய்யப்பட்டது.' என்றார்.

இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

'ஏற்கனவே நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி எதுவும் தெரியாமல் பாகிஸ்தான் விளையாட்டு மந்திரி பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த போட்டியை இரு நாடுகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உயர்மட்ட கூட்டத்தில் பரிந்துரைத்து அது ஏற்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதை பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்' என்றார்.


Next Story