சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மலேசிய வீரர் உலக சாதனை
சியாஸ்ருல் இட்ருஸ் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
கோலாலம்பூர்,
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல 'பி' பிரிவு தகுதி சுற்று போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் மலேசிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சீனாவை எளிதில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சீனா 11.2 ஓவர்களில் 23 ரன்னில் அடங்கியது.
மலேசிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சியாஸ்ருல் இட்ருஸ் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் அள்ளினார். ஸ்டம்பை குறி வைத்து தாக்குதல் தொடுத்த அவர் 7 பேரையும் போல்டாக்கி மிரட்டினார்.
இதன் மூலம் 32 வயதான சியாஸ்ருல் இட்ருஸ் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். சர்வதேச போட்டி மட்டுமின்றி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் இது சிறந்த பந்து வீச்சாக பதிவானது.
இதுவரை எந்தவொரு வீரரும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 விக்கெட்டுக்கு மேல் எடுத்ததில்லை. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு சியாரா லியோன் அணிக்கு எதிராக நைஜீரியா வீரர் பீட்டர் அஹோ 5 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறப்பான பந்து வீச்சாக இருந்தது. அதை சியாஸ்ருல் இட்ருஸ் முறியடித்துள்ளார்.