ஐ.பி.எல் 2024; சுப்மன் கில் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது - ஆஷிஷ் நெஹ்ரா


ஐ.பி.எல் 2024; சுப்மன் கில் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது - ஆஷிஷ் நெஹ்ரா
x

image courtesy; AFP

குஜராத் அணியின் கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரு சீசன்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் மும்பை அணியால் பரிமாற்றும் முறையில் வாங்கபட்டார்.

மேலும் அவர் இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். ஹர்திக் பாண்ட்யா விலகியதை அடுத்து குஜராத் அணியின் கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சுப்மன் கில் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது என குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சுப்மன் கில் கேப்டனாக எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் கேப்டனாக இருப்பதை விட ஒரு நபராக அவர் வளர உதவுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக ஒரு சிறந்த கேப்டனாக முன்னேறுவார்.

குஜராத் அணியை வழிநடத்துவதற்கு முன்னர் பாண்ட்யா ஒரு அணியை கேப்டனாக வழிநடத்தியது கிடையாது. தற்போது 10 அணிகள் உள்ளன. இது முதல் உதாரணம் அல்ல. நிதிஷ் ராணா போன்ற வீரர் கொல்கத்தா அணியை வழிநடத்துவதற்கு முன் எந்த ஒரு அணியையும் கேப்டனாக வழிநடத்தியது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story