ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்
x

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று மோதுகிறது.

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது நிலையை இன்னும் திடப்படுத்திக் கொள்ளலாம். இந்த சீசனில் ஏற்கனவே சந்தித்த லீக்கில் டெல்லியை வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். விராட் கோலி, பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ரன்வேட்டை தொடர்ந்தால் பெங்களூருவை அடக்குவது கடினம்.

அதே சமயம் முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக உதைவாங்கிய டெல்லி அணி, கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டுள்ளது. கடந்த ஆட்டத்தில் 131 ரன்களை இலக்காக நிர்ணயித்து குஜராத்தை 5 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆச்சரியமான ஒரு வெற்றியை ருசித்தது. கடைசி சில ஆட்டங்களில் சொதப்பிய கேப்டன் வார்னர் ரன்குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அத்துடன் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டும் 'பிளே-ஆப்' வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால், இது அவர்களுக்கு வாழ்வா-சாவா மோதலாக அமைந்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் பெங்களூருவும், 10-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story