ஐ.பி.எல். கிரிக்கெட்: 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தா - டெல்லியுடன் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தா - டெல்லியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 3 April 2024 12:26 AM GMT (Updated: 3 April 2024 3:27 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

விசாகப்பட்டினம்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 2-வது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோல்வி கண்டது. அடுத்து, தன்னுடைய 2-வது உள்ளூர் மைதானமான விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 191 ரன்கள் குவித்த டெல்லி அணி, சென்னையை 171 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.

அதேபோல் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சையும், அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து வலுவான நிலையில் உள்ளது.

விசாகப்பட்டினத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்தை தொடர்வதற்காக டெல்லி அணியும், 'ஹாட்ரிக்' வெற்றியை சுவைப்பதற்காக கொல்கத்தா அணியும் தீவிர முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story