ஐ.பி.எல். போட்டியில் டோனி அடுத்த ஆண்டும் ஆடுவார்... சுரேஷ் ரெய்னா சொல்கிறார்.!


ஐ.பி.எல். போட்டியில் டோனி அடுத்த ஆண்டும் ஆடுவார்... சுரேஷ் ரெய்னா சொல்கிறார்.!
x

‘தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தை அனுபவித்து வருகிறேன்’ என்று தோனி கூறி இருந்தார்.

புதுடெல்லி, -

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான 41 வயது டோனி நடப்பு தொடரின் போது ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் பேசுகையில், 'தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தை அனுபவித்து வருகிறேன்' என்று குறிப்பிட்டார்.

இதனால் அவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் விவாதித்தனர். அதன் பிறகு லக்னோவில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்ச்சியின் போது டோனியிடம் டெலிவிஷன் வர்ணனையாளர் டேனி மோரிசன், 'உங்களது கடைசி ஐ.பி.எல். தொடரை எப்படி அனுபவித்து வருகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் 'நீங்கள் தான் இது எனக்கு இறுதி தொடர் என்று முடிவு செய்து இருக்கிறீர்கள். நான் அப்படி எதுவும் சொல்லவில்லை' என்று சிரித்தபடி பதிலளித்து தனது ஓய்வு யூகங்களுக்கு விடைகொடுத்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியுடன் நீண்ட காலம் இணைந்து ஆடிய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா காணொலி மூலம் அளித்த ஒரு பேட்டியில், 'சமீபத்தில் நான் டோனியை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வெல்வேன் என்றும் அடுத்த ஆண்டு போட்டியிலும் விளையாடுவேன் என்றும் தெரிவித்தார்.

டோனி நல்ல நிலையில் இருக்கிறார். உண்மையிலேயே சிறப்பாகவும் ஆடி வருகிறார். ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னின்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவர் அச்சமின்றி விளையாடக்கூடியவர். நடப்பு சாம்பியனான குஜராத் அணி மீண்டும் கோப்பையை வென்றால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார். வருங்காலத்தில் அவர் இந்திய அணியின் கேப்டனாக வருவார்.

தற்போது நமது நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக விளங்கும் அவருக்கு கேப்டன்ஷிப்பை பொறுத்தமட்டில் பிரகாசமாக எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் சர்மா சிறப்பாக வழிநடத்துகிறார். சமீபத்தில் அவர் பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். தரமான வீரரான அவர் தனது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் விரைவில் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். அதற்கு அவருக்கு ஒன்றிரண்டு ஆட்டங்கள் நன்றாக அமைந்தால் போதும்' என்று தெரிவித்தார்.


Next Story