ஐ.பி.எல். இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கியது - 15 ஒவர்களில் 171 ரன்கள் இலக்கு


ஐ.பி.எல். இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கியது - 15 ஒவர்களில் 171 ரன்கள் இலக்கு
x

Image Courtacy: IndianPremierLeagueTwitter

தினத்தந்தி 29 May 2023 11:53 PM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கி உள்ளது. மேலும் போட்டி 15 ஒவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீல்டிங்கில் சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயே கேட்சை தீபக் சாஹர் தவற விட்டார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.

இந்த சூழலில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லின் அதிரடிக்கு தடை போட்டார். இதன்படி 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்த ஜோடியில் சஹா 54 (39) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் ஹர்திக் பாண்ட்யா 21 (12) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 3 பந்துகள் வீசப்பட்டநிலையில் தீடீரென போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மழை நின்றவுடன் மைதானத்தில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி, மைதானத்தை தயார் படுத்தினர்.

இந்நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் போட்டி 15 ஒவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story