ஐ.பி.எல்: கோலி அரைசதம்... பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.பி.எல்: கோலி அரைசதம்... பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பெங்களூரு,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்த நிலையில் மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ஷிகர் தவானும் 45 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா - சாம் கர்ரண் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதில் சாம் கர்ரண் 23 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் சஷாங் சிங் அதிரடியாக விளையாடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி- டு பிளஸ்சிஸ் களமிறங்கினர்.

டு பிளஸ்சிஸ், கிரீன் ஆகியோர் தலா 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். படிதார் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் (3 ரன்களில் அவுட்) தாக்குப்பிடிக்கவில்லை.

ஒருபுறம் கோலி மட்டும் அணியின் வெற்றிக்காக தனி ஆளாக நின்று அதிரடியுடன் விளையாடினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 77 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

எனினும், ஆட்டத்தின் கடைசிகட்டத்தில் தினேஷ் கார்த்திகும், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய லோம்ரோரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர் . இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. தினேஷ் கார்த்திக் 27 ரன்களும், லோம்ரோர் 17 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். பஞ்சாப் தரப்பில் ரபாடா, ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.



Next Story