ஐ.பி.எல்.தொடர்: புதிய விதிப்படி தோனி தக்கவைக்கப்படுவாரா ? காசி விஸ்வநாதன் பதில்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது
சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் ஆன இந்திய வீரர்கள் ஐ.பி.எல்.-ல் ஆடும் போது அவர்கள் சர்வதேச போட்டியில் இல்லாத உள்ளூர் வீரராக கருதப்படுவார் என்பதே இந்த விதிமுறையாகும் . இதைப் பயன்படுத்தி தோனியை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் 'தோனியை உள்ளூர் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. உள்ளூர் வீரர் விதியை தோனினிக்கு பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். அதனால் இதை பற்றி தற்போது பேச முடியாது. இந்த வாரம் நான் அவரை சந்திக்க இருக்கிறேன். அதன் பின்னர் தெளிவு கிடைக்கும். அவர் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது தோனினியின் முடிவாகும்' என்றார்