ஐ.பி.எல். களத்திற்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்... மும்பை ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி


ஐ.பி.எல். களத்திற்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்... மும்பை ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி
x

image courtesy: AFP

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய அவர் அதற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். மேலும் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்கிற குடல் இறக்க பாதிப்பிற்காக முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்கப்பட்டது. இதில், மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உடல் தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் சில பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையலாம். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்னதாக 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும், போட்டிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்பட்டது. ஏனெனில் நடப்பு சீசனில் மும்பை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நாளை அல்லது நாளை மறுநாள் மும்பை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்விகளால் துவண்டு போயுள்ள மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இவரது வருகை ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.


Next Story