ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்.. முதல் ஆட்டத்தில் பஞ்சாப்-டெல்லி மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்.. முதல் ஆட்டத்தில் பஞ்சாப்-டெல்லி மோதல்
x

இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சண்டிகர்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் 33 ஆயிரம் இருக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பயங்கர கார்விபத்தில் சிக்கி உயிர்தப்பிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். கடந்த வருடம் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை கவனித்த நிலையில் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியை எட்டியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் அவர் முதல் ஆட்டத்தில் இருந்தே விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யாவிட்டால் ஷாய் ஹோப், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஆகியோரில் ஒருவர் கீப்பிங் பணியை கவனிக்கக்கூடும். 'எனக்குள் பதற்றம், பரவசம் எல்லாமே இருக்கிறது. அதே சமயம் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மீண்டும் களம் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளைய (இன்று) ஆட்டத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். முடிந்த வரை நீண்ட நேரம் பேட் செய்ய விரும்புகிறேன்' என்று பண்ட் குறிப்பிட்டார்.

டெல்லி அணியில் பேட்டிங்கில் பிரித்வி ஷா, வார்னர், மிட்செல் மார்ஷ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ரிஷப் பண்ட் என்று அதிரடி வீரர்களுக்கு குறைவில்லை. பந்து வீச்சில் அன்ரிச் நோர்டியா, இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியில் புதிய துணை கேப்டனாக ஜிதேஷ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் ஷிகர் தவான் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஜானி பேர்ஸ்டோ பார்மின்றி தவிப்பது கவலைக்குரிய விஷயமாகும். ஆல்-ரவுண்டராக சிகந்தர் ராசா, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் மிரட்டக்கூடியவர்கள். பந்து வீச்சில் ககிகோ ரபடா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், நாதன் எலிஸ் நல்ல நிலையில் உள்ளனர்.

இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப், டெல்லி அணிகள் கடந்த ஆண்டு முறையே 8-வது, 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்ததால், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 16-ல் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

முதுகு வலி பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு போட்டியை முழுமையாக தவற விட்ட ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்புக்கு திரும்பி இருக்கிறார். இதே போல் அந்த அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் ஆலோசகராக இணைந்து இருக்கிறார். இந்த கூட்டணியால் அந்த அணி மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொல்கத்தா அணியில் சாதனை தொகையாக ரூ.24¾ கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு முக்கியமானதாகும். அவரை தவிர்த்து அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக ஆந்த்ரே ரஸ்செல் மட்டுமே உள்ளார். சுழற்பந்து வீச்சு தான் கொல்கத்தாவின் பிரதான பலமாகும். சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, முஜீப் ரகுமான் கலக்குவார்கள். பேட்டிங்கில் ரமனுல்லா குர்பாஸ், பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங் என்று பெரிய அதிரடி பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது.

கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ஐதராபாத் அணி மார்க்ரமை மாற்றி விட்டு ரூ.20½ கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கும் கம்மின்சை புதிய கேப்டனாக்கி இருக்கிறது. ஐதராபாத் அணியில் வெளிநாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், மார்க்ரம், கிளென் பிலிப்ஸ், ஹசரங்கா, பரூக்கி, கேப்டன் கம்மின்ஸ் என வலுவான வரிசை இருந்தாலும், உள்ளூரை சேர்ந்த சிறந்த வீரர்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்களில் 4 பேரை தான் களம் இறக்க முடியும். எனவே இந்த பிரச்சினையை அந்த அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் கொல்கத்தா அணியின் வலுவான சுழல் தாக்குதலை சமாளிப்பது தான் ஐதராபாத் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர்கள் இருவரில் (ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ்) யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கொல்கத்தா 16 ஆட்டத்திலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story