சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அயர்லாந்து வீராங்கனை


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அயர்லாந்து வீராங்கனை
x

image courtesy;twitter/@ICC

மேரி வால்ட்ரான் அயர்லாந்து அணிக்காக 10 போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டு உள்ளார்.

டப்ளின்,

அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மேரி வால்ட்ரான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து உள்ளார். 39 வயது நிரம்பிய அவர் அயர்லாந்து பெண்கள் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வால்ட்ரான் 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்து உள்ளார்.

அயர்லாந்து அணிக்காக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 481 ரன்களும், 88 டி20 போட்டிகளில் விளையாடி 531 ரன்களும் எடுத்து உள்ளார். மேலும் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 67 கேட்சுகள் மற்றும் 44 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். அவர் 10 போட்டிகளில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அதில் 6 போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அவரது கடைசி சர்வதேச போட்டி இந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது ஆகும்.

ஓய்வு முடிவு குறித்து வால்ட்ரான் பேசுகையில்,"இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஆனால் நான் விளையாடியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு முதல் நன்றி. மேலும் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஊழியர்கள் ,பயிற்சியாளர்கள், எனது பயணத்தை வடிவமைத்து எனக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி . உலகின் சிறந்த ஆதரவாளர்களான அம்மா, அப்பா ,எனது குடும்பத்திற்கும்,ரசிகர்களின் ஆதரவிற்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி"என உணர்ச்சிப்பூர்வமாக தனது நன்றிகளை தெரிவித்து உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் போட்டிகளில் நடுவராக பணிபுரிய உள்ளார். அதற்காக அவர் எற்கனவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story