சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் சிறந்த வீரரா?- நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அளித்த பதில்


சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் சிறந்த வீரரா?- நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அளித்த பதில்
x

Image Courtesy: AFP 

இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார்.

மவுண்ட் மாங்கானு,

நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சூர்ய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர்,

இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு சவுதி தெரிவித்துள்ளார்.


Next Story