இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!


தினத்தந்தி 14 Oct 2023 8:35 PM GMT (Updated: 15 Oct 2023 6:06 PM GMT)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது.

ஜெருசலேம்,

Live Updates

  • 15 Oct 2023 8:01 AM GMT

    வடக்கு காசாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - பாலஸ்தீனர்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த இஸ்ரேல்

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா மீது இஸ்ரேல் தரைவழி, கடல்வழி, வான்வழி என மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

    இந்த எச்சரிக்கையை தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காசா நகரில் உள்ள மக்கள் தெற்குப்பகுதிக்கு செல்லும்படி கடந்த சில நாட்களாக நாங்கள் கோரிக்கைவிடுத்து வருகிறோம். சலப் அட்டின் தெரு வழியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (3 மணி நேரம் - தற்போதைய இஸ்ரேல் நேரம் காலை 10.45) இஸ்ரேல் பாதுகாப்புப்படை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வடக்கு காசாவில் உள்ள மக்கள் தயவு செய்து தெற்கு பகுதிக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் முக்கியம். தயவு செய்து எங்கள் ஆலோசனையை கேட்டு தெற்கு பகுதிக்கு செல்லுங்கள். ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர்களும், குடும்பத்தினரும் அவர்களின் பாதுகாப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டனர்’ என்றார்.

  • 15 Oct 2023 7:17 AM GMT

    சவுதி பட்டத்து இளவரசருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

    ஹமாஸ் ஆயுதக்குழு - இஸ்ரேல் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று சவுதி அரேபியா சென்றுள்ளார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார்.

    ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் சந்தித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் முயற்சியால் சமீபத்தில் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியது. ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முயற்சி தற்காலிகமாக தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 15 Oct 2023 6:11 AM GMT

    ஹமாசின் முக்கிய தளபதி கொலை - இஸ்ரேல் பாதுகாப்புப்படை தகவல்

    ஹமாசின் நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா, வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. வட காசா மக்கள் உடனடியாக தெற்கு காசாவிற்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்புப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 15 Oct 2023 5:59 AM GMT

    காசா மீது ‘முப்படை’ தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்

    வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வடக்கு காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி, கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்ட அறிவிப்பில், காசா மீது தரை, வான், கடல் வழியாக ஒருங்கிணைந்த முப்படை தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். காசா எல்லையில் அதிக அளவிலான வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. இறுதி உத்தரவுக்காக காத்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 15 Oct 2023 3:07 AM GMT

    2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பிய அமெரிக்கா

    ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக்கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் 2 அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

  • 15 Oct 2023 1:57 AM GMT

    பலி எண்ணிக்கை:

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.

  • 15 Oct 2023 1:52 AM GMT

    9ம் நாளாக தொடரும் போர்:

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

  • 14 Oct 2023 10:50 PM GMT

    ‘இது இரண்டாவது பேரழிவு’ - காசா மக்கள் வேதனை

    தற்போது நடப்பவை 1948 போரை நினைவூட்டுவதாக காசா மக்கள் வேதனை

    1948-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அதன் நீட்சியாக இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நீடித்த இந்த போரின் போது 500 பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களை இஸ்ரேல் அழித்தது.

    இன்றைக்கு இஸ்ரேலாக இருக்கும் பாலஸ்தீன பகுதிகளிருந்து ஏறத்தாழ 7 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் அவர்களால் தங்களின் பகுதிக்கு திரும்பவே முடியவில்லை. அப்படி இடம் பெயர்ந்தவர்களின் வாரிசுகள்தான் தற்போது காசாவில் போர் சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். 1948 போரின் போது கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்ட நிகழ்வை பாலஸ்தீனர்கள் ‘நக்பா' (பேரழிவு) என அழைக்கிறார்கள்.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வரும் பாலஸ்தீனர்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதை ‘இரண்டாவது நக்பா’ என்கிறார்கள்.

    இதுப்பற்றி காசாவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “இப்போது நடப்பவை எல்லாம் நக்பாவை நினைவுபடுத்துகிறது. 1948-ம் ஆண்டு போரில் ஏற்பட்ட பேரழிவால் 7½ லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணிலிருந்தே வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இப்போது காசாவிலிருந்து வெளியேற்றப்படுகின்றோம், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் எங்கள் நிலம். இங்கேதான் எங்களின் வேர்கள் இருக்கும். சுதந்திரம், அமைதி, பாதுகாப்புக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

  • 14 Oct 2023 10:29 PM GMT

    பலி 5 ஆயிரத்தை எட்டியது

    ஹமாஸ் அமைப்பினரால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்கும் முயற்சியாக ராணுவ வீரர்கள் தரை வழியாக காசாவுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசா பகுதியிலுள்ள ஆஸ்பத்திரியை தொடர்புகொண்டு இடம்பெயர ஆணையிட்டுள்ளது. நூற்றுக்கணக்கிலான காயமுற்றவர்களை இடம்மாற்றுவது எளிதானது அல்ல அவர்களை கைவிட்டும் செல்ல முடியாது என ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் வௌியேறுவதற்கான காலக்கெடுவை மேலும் 6 மணி நேரம் நீட்டித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள் மற்றும் 458 பெண்கள் உள்பட 2,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 8 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாக்குதலில் 1,500 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதன்படி காசா தரப்பில் மட்டும் இதுவரை 3,700-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

    அதே சமயம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1,300 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது.

  • 14 Oct 2023 9:49 PM GMT

    காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம்

    பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் பலியானதாக காசா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கவில்லை. அதே சமயம் “காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்கள் எங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் அவர்களை அப்படி மதிப்பிடவில்லை, நாங்கள் அவர்களை குறிவைக்கவில்லை. நாங்கள் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம்” என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலை தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story