ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது சரியே - சுனில் கவாஸ்கர்


ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது சரியே - சுனில் கவாஸ்கர்
x

ரோகித் சர்மா தொடர்ச்சியாக விளையாடுவதாலும், இந்தியா மற்றும் மும்பை இந்தியன்சை வழிநடத்துவதாலும் சோர்வடைந்திருக்கலாம்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் இந்த முடிவை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது சரியே. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு குறைந்து விட்டது என்று சொல்ல முடியும். முன்பு பேட்டிங்கில் நிறைய பங்களிப்பை வழங்கினார்.

ஆனால் அது குறைந்து விட்டது என்பதற்கு கடந்த சில ஆண்டுகளில் மும்பை அணி 9-10 இடத்திற்கு தள்ளப்பட்டதே சான்று. இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும் அந்த அணி வீரர்களிடம் முன்பு இருந்த உற்சாகத்தை பார்க்க முடியவில்லை. அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதாலும், இந்தியா மற்றும் மும்பை இந்தியன்சை வழிநடத்துவதாலும் சோர்வடைந்திருக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க முக்கிய காரணம் அவர் ஒரு இளம் வீரர். அத்துடன் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு முறை கோப்பையை வென்று தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால்தான் அவரை கேப்டனாக்கி இருக்கிறார்கள். சில நேரம் புதிய சிந்தனை தேவையாகும். அதனை அவரால் கொண்டு வர முடியும். எனவே, இந்த முடிவில் இருந்து மும்பை பலன் அடையுமே தவிர, பாதகமாக இருக்காது என்று கருதுகிறேன். இவ்வாறு கூறினார்.


Next Story