ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி போராடி வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி போராடி வெற்றி
x
தினத்தந்தி 8 Jan 2024 7:32 PM GMT (Updated: 8 Jan 2024 7:33 PM GMT)

இலங்கை அணி 49-வது ஓவரில் இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி கடந்த 6-ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் கிரேக் எர்வின் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

44.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 82 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பெர்னாண்டோ (4), கேப்டன் குசல் மெண்டிஸ் (17), சமரவிக்ரமா (4), அசலங்கா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 53 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும், அணியை சரிவில் இருந்து மீட்க ஜனித் லியனகே போராடினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய அவர், 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பின்வரிசை பேட்மேன்கள் ஒருசில பவுண்டரிகள் அடிக்க, 49-வது ஓவரில் இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றிபெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.


Next Story