ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேச அணி சாம்பியன்..!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேச அணி சாம்பியன்..!
x

image courtesy; twitter/ @ACCMedia1

யுஏஇ அணி தரப்பில் அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்கள் அடித்தார்.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வங்காளதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி மற்றும் ஜிஷான் ஆலம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜிஷான் ஆலம் 7 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரிஸ்வான் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் - ரஹ்மான் ஷிப்லி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரிஸ்வான் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய அரிபுல் இஸ்லாம் 50 ரன்கள், அஹ்ரார் அமீன் 5 ரன்கள், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி வங்காளதேச வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

யுஏஇ அணி தரப்பில் அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக மருப் மிருதா மற்றும் ரோஹனத் டவுல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story