ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நியூசிலாந்து


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நியூசிலாந்து
x

Image Courtesy: @ICC

15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

ஈஸ்ட் லண்டன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெறும் 21.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 22 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மாட் ரோவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 92 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என எதிரபார்த்த வேளையில் நியூசிலாந்து 28.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ரன் எடுத்து போராடி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆஸ்கார் ஜாக்சன் 26 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்பர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story