ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; ஹர்ஜாஸ் சிங் அரைசதம் - ஆஸ்திரேலியா 253 ரன்கள் சேர்ப்பு


ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; ஹர்ஜாஸ் சிங் அரைசதம் - ஆஸ்திரேலியா 253 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 11 Feb 2024 11:42 AM GMT (Updated: 11 Feb 2024 3:51 PM GMT)

இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், நிமன் திவாரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பெனோனி,

15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் பெனோனி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம் கான்ஸ்டாஸ் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து ஹக் வெய்ப்ஜென் களம் இறங்கினார். ஹாரி டிக்சன் - ஹக் வெய்ப்ஜென் இணை நிதானமாக ஆடி ரன்கள் எடுத்தனர். இதில் ஹாரி டிக்சன் 42 ரன்னிலும், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹர்ஜாஸ் சிங் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார்.

ஹர்ஜாஸ் சிங் 55 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் ஹிக்ஸ் 20 ரன்னிலும், ராப் மேக்மில்லன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், நிமன் திவாரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.


Next Story