ஐ.பி.எல். கிரிக்கெட்: 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி..!!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவிட் வில்லே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் நிதிஸ் ராணா 1 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகவிளையாடினர்.
குறிப்பாக ஷர்துல் தாக்கூர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர்.
இந்நிலையில் இந்த ஜோடியில் விராட் கோலி 21 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து டூ பிளசிஸ் 23 ரன்களும், அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 5 ரன்னும், ஹர்சல் பட்டேல் (0) ரன் ஏதும் எடுக்காமலும், மிட்செல் பேரேஸ்வெல் 19 ரன்களும், அனுஜ் ராவத் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னும், கரண் சர்மா 1 ரன்னும், ஆகாஷ் தீப் 17 ரன்களும் எடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர்.
இறுதியில் வில்லி 20 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பெங்களூரு அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.