பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: சாப்மேன் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: சாப்மேன் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி
x

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 98 ரன்னும் (62 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகர் அகமது 36 ரன்னும், இமாத் வாசிம் 31 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 194 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 73 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (9.5 ஓவரில்) இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான சூழலில் ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மேனுடன் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 19.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது முதலாவது சதத்தை எட்டிய மார்க் சாப்மேன் 104 ரன்களுடனும் (57 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 45 ரன்களுடனும் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த தொடரில் சதம் உள்பட 290 ரன்கள் குவித்த மார்க் சாப்மேன் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து ருசித்த 100-வது வெற்றி (193 ஆட்டத்தில்) இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3-வது அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வென்று இருந்தன. 4-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.


Next Story