கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது.
திருவனந்தபுரம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர்.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-சும்பன் கில் களமிறங்கினர். இதில் இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் ரோகித் சர்மா(42 ரன்கள், 2 பவுண்டரி, 3 சிக்ஸர்) கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 116 ரன்கள் குவித்த சுப்மன் கில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
இதையடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களில்(2 பவுண்டரி, 1 சிக்ஸர்) கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கே.எல்.ராகுல்(7 ரன்கள்), சூர்யகுமார் யாதவ்(4 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய விராட் கோலி, 100 ரன்களை கடந்து இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 110 பந்துகளில் 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 166 ரன்கள் குவித்த விராட் கோலி, இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இதையடுத்து 391 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.