இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் விலகல்

Image Courtesy: AFP
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் விலகி உள்ளார்.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஆகஸ்ட்-25 தொடங்கியது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 106.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
அடுத்து 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி செப்-8ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் பேட்ஸ்மேன் ரஸ்ஸி வான் டெர் டுசென் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது அவரது இடது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக அணியில் ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.






