வாணவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல் 201* : ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!!


தினத்தந்தி 7 Nov 2023 4:52 PM GMT (Updated: 7 Nov 2023 6:14 PM GMT)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

மும்பை,

உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்னும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 12 ரன்னிலும் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராகிம் ஜட்ரன் பெற்றார். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி உலகக் கோப்பையில் 96 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரன் 129 ரன்களும், ரஷித் கான் 35 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதலாவதாக களமிறங்கிய வார்னர், ஹெட் ஜோடியில் ஹெட் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய மிட்டெல் மார்ஷ் 24 ரன்களும், டேவிட் வார்னர் 18 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், லபுஸ்சேன் 14 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னும் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் கம்மின்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில், மறுபுறம் மேக்ஸ் வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். விரைவாக அரைசதம் கடந்த அவர் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினார். தொடர்ந்து ஆப்கான் அணியின் பந்து வீச்சை சிதறடித்த அவர், தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

தசைப்பிடிப்பால் அவதியடைந்த மேக்ஸ்வெல் விரைவில் விக்கெட் இழப்பார் என்று எண்ணியிருந்த ஆப்கான் வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலியால் அவதியடைந்தாலும் பந்துகளை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அவரது விக்கெட்டை எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் தனது இரட்டை சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

முடிவில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்தது. இறுதியில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 201 ரன்களும், பேட் கம்மின்ஸ் 12 (68) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் ஜோடி, 8 ஆவது விக்கெட்டுக்கு 170 பந்துகளில் 202 ரன்கள் பார்டினர்ஷிப் குவித்து புதிய சாதனை படைத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் நவீன் உல்-ஹக், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கான தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை மேக்ஸ்வெல் பெற்றுக்கொண்டார்.


Next Story