பெண்கள் பிரிமீயர் லீக்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி


பெண்கள் பிரிமீயர் லீக்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
x
தினத்தந்தி 12 March 2023 10:56 PM IST (Updated: 13 March 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் உ.பி. வாரியர்சை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது.

மும்பை,

5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

இதில் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 10-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன.

'டாஸ்' ஜெயித்த உ.பி. வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், தேவிகா வைத்யாவும் உ.பி. அணியின் தொடக்க வீராங்கனைகளாக நுழைந்தனர். தேவிகா 6 ரன்னிலும், அடுத்து வந்த கிரண் நவ்கிரே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு அலிசா ஹீலேவும், தாலியா மெக்ராத்தும் ஜோடி சேர்ந்து ரன்ரேட்டை வெகுவாக உயர்த்தினர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.

ஆனால் இந்த இணை பிரிந்ததும் கடைசி கட்டத்தில் ரன்வேகம் ஒரேயடியாக குறைந்து போனது. அலிசா ஹீலே 58 ரன்களிலும் (46 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தாலியா மெக்ராத் 50 ரன்களிலும் (37 பந்து, 9 பவுண்டரி) இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய்கா இஷாக்கின் சுழலில் சிக்கினர். சோபி எக்லெஸ்டன் (1 ரன்), தீப்தி ஷர்மா (7 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

20 ஓவர் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணி கடைசி 5 ஓவர்களில் 26 ரன் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. மும்பை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக் 3 விக்கெட்டும், அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 160 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் யாஸ்திகா பாட்டியாவும் (42 ரன்), ஹெய்லி மேத்யூசும் (12 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் நாட் சிவெரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் கூட்டணி அமைத்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர்.

சரவெடியாய் வெடித்த ஹர்மன்பிரீத் கவுர், தாலியா மெக்ராத்தின் ஒரே ஒவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் தெறிக்க விட்டார். இறுதியில் பவுண்டரி, சிக்சருடன் நாட் சிவெர் ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

மும்பை வெற்றி

மும்பை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 53 ரன்களுடனும் (33 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 45 ரன்களுடனும் (31 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. 4-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி. வாரியர்சுக்கு இது 2-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story