என்னுடைய கனவே தோனியை பார்க்க வேண்டும் என்பதுதான் - துருவ் ஜூரேல்


என்னுடைய கனவே தோனியை பார்க்க வேண்டும் என்பதுதான் - துருவ் ஜூரேல்
x

image courtesy; instagram/dhruvjurel

தினத்தந்தி 21 Feb 2024 9:53 AM GMT (Updated: 21 Feb 2024 10:00 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

ராஞ்சி,

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

இந்த தொடரின் 3-வது போட்டியில் அறிமுகம் ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் எதிர்வரும் 23-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள துருவ் ஜூரேல் கூறுகையில்;- 'நான் தோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் உடனான முதல் சந்திப்பு எனக்கு 2021-ம் ஆண்டு ஏற்பட்டது. முதல் முறை நான் அவரை பார்க்கும்போது உண்மையிலேயே நான் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பதை பரிசோதிக்க என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.

நான் ஏற்கனவே தோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான். இம்முறை நான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகிவிட்டு தற்போது அவரை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அவருடன் எப்போது பேசினாலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ராஞ்சி நகரில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அவரை எப்படியும் சந்திப்பேன்' என்று கூறினார்.


Next Story