சென்னை - கொல்கத்தா போட்டியை பார்க்க என் குடும்பமே வந்தார்கள் ஆனால்....- வருண் சக்கரவர்த்தி சுவாரஸ்ய தகவல்


சென்னை - கொல்கத்தா போட்டியை பார்க்க என் குடும்பமே வந்தார்கள் ஆனால்....- வருண் சக்கரவர்த்தி சுவாரஸ்ய தகவல்
x

Image Courtesy: Twitter

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தாலும் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பின்னர் தோல்வி குறித்து பேசிய வருண் சக்கரவர்த்தி கூறியதாவது, சென்னை அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் ஆடுகளத்தை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது.

குறிப்பாக முதல் பாதியில் ரன்கள் அடிப்பது கடினமாக இருந்தது. எனவே 160 ரன்கள் வரை இருந்தால் அது சவாலான இலக்காக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எங்களால் அந்த அளவிற்கு ரன்களை குவிக்க முடியவில்லை. அதேபோன்று மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பந்தை கிரிப் செய்தும் வீச முடியவில்லை என கூறினார்.

ஆனால் போட்டி தொடங்கும் முன் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை காண எனது குடும்பத்தில் இருந்த அனைவருமே நேரில் வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் எனது ஆட்டத்தை ரசிக்க வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவருமே மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்து சி.எஸ்.கே அணிக்கு சப்போர்ட் செய்தனர் என்ற சுவாரஸ்ய தகவலை கூறினார்.


1 More update

Next Story