கடைசி 5 ஓவர்களில் விளையாடுவதுதான் இந்திய அணியில் என்னுடைய ரோல் - ரிங்கு சிங்


கடைசி  5 ஓவர்களில் விளையாடுவதுதான் இந்திய அணியில் என்னுடைய ரோல் - ரிங்கு சிங்
x

image courtesy; PTI

தினத்தந்தி 27 Nov 2023 5:07 PM IST (Updated: 27 Nov 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

திருவனந்தபுரம்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் 191 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் இறுதி கட்ட ஓவர்களில் களமிறங்கி 9 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 19-வது ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரி என அதிரடியில் வெளுத்து கட்டினார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு அதிரடியாக விளையாடுவதற்கான காரணம் குறித்து ரிங்கு சிங் கூறுகையில்;-' நான் இந்திய அணியில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் தற்போது விளையாடி வருகிறேன். எனவே இறுதி கட்டத்தில் பதட்டமடையாமல் நிதானமாக இருந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நான் அதற்கேற்றார்போல் பந்தை பார்த்து அடிக்கிறேன். சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக அணியை வழி நடத்துகிறார்.

இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது விளையாடி வருகிறோம். கடைசி கட்ட 5 ஓவர்களில் விளையாடுவது தான் இந்திய அணியில் என்னுடைய ரோல். எனவே நான் போட்டிகளை பினிஷிங் செய்து கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பயிற்சியில் என்னால் சிறப்பாக செயல்பட முடிவதால்தான் போட்டியிலும் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடிகிறது' என்று கூறினார்.


Next Story