'சாதனை குறித்து ஒரு போதும் சிந்திப்பதில்லை' - சூர்யகுமார் யாதவ்


சாதனை குறித்து ஒரு போதும் சிந்திப்பதில்லை - சூர்யகுமார் யாதவ்
x

ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

கயானா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கயானாவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் இலக்கை 17.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 83 ரன்களும் (44 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 49 ரன்களும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டனர். இவ்விரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அமெரிக்காவின் லாடெர்ஹில் நகரில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பிறகு 32 வயதான சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்த ஆட்டத்தில் நான் முதல் ஓவரிலேயே களம் இறங்கி விட்டேன். 'பவர்-பிளே' யில் பேட்டிங் செய்ய நுழையும் போது, அதிக ரன்கள் குவிக்க வேண்டியது முக்கியம். அதைத் தான் அணி நிர்வாகமும் விரும்பும். அது மட்டுமின்றி இந்திய அணி 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றதில்லை. அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்ற எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அணி வீரர்களின் கூட்டத்தில் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வெற்றி பெறுவதற்கு யாராவது ஒருவர் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று கூறினார். அதை நான் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதனை குறித்து (20 ஓவர் போட்டியில் 101 சிக்சர்) நான் ஒரு போதும் சிந்திப்பதில்லை. எனது இன்னிங்சை நீங்கள் பாருங்கள். எனது பேட்டிங்கின் போது 47 அல்லது 98 ரன்னில் இருக்கும் போது கூட, அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்ப தான் விளையாடுவேன்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் எனது ஆட்டத்திறன் குறித்து கேட்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் கிரிக்கெட்டில் எனது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அதை ஒப்புக் கொள்வதில் வெட்கப்படவில்லை. ஏனெனில் இது பற்றி ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருந்து ஆட்டத்தை எப்படி மேம்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசினேன். அவர்கள், 'நான் 50 ஓவர் வடிவிலான போட்டிகளில் அதிகமாக விளையாடாததே தடுமாற்றத்துக்கு காரணம்' என்று கூறினர். கடைசி 10-15 ஓவர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அணிக்கு என்னால் என்ன பங்களிப்பு வழங்க முடியும் என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு இன்னிங்சில் நான் குறைந்தது 45-50 பந்துகளையாவது எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். கடைசி 15-18 ஓவர்களில் களத்தில் இருக்கும் பட்சத்தில், நிறைய பந்துகளை சந்திக்கும் போது எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் ரோகித்தும், டிராவிட்டும் சொன்னார்கள். எனவே இந்த வாய்ப்பை எப்படி பொறுப்பாக மாற்றிக்கொள்வது என்பது எனது கையில் தான் உள்ளது.

நிறைய 20 ஓவர் போட்டிகள் நடப்பதால் அதில் எப்படி விளையாட வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது. ஆனால் ஒருநாள் போட்டி அதிக அளவில் நடக்கவில்லை. 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட் மிகவும் சவாலானது. இதில் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங் செய்ய வேண்டும். உதாரணமாக, தொடக்க விக்கெட்டுகள் சீக்கிரம் சரிந்து விட்டால், அதன் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி டெஸ்ட் போட்டி போன்று விளையாட வேண்டும். அதாவது ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுக்க வேண்டும். இறுதிகட்டத்தில் 20 ஓவர் கிரிக்கெட் பாணியில் அதிரடி காட்ட வேண்டும். ஒரு நாள் போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்பதை அணி நிர்வாகம் என்னிடம் தெளிவாக சொல்லி இருக்கிறது. அதன்படி விளையாட முயற்சிக்கிறேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நமக்கு 7 அல்லது 8 ஒரு நாள் போட்டிகள் உள்ளன. உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு அது போதுமானது. அத்துடன் அனைத்து வீரர்களும் ஒன்றிணைவதற்கு பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது. பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கு ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்வது முக்கியம்.

திலக் வர்மா மீண்டும் ஒரு முறை அசத்தியுள்ளார். அவருக்கு வயது 20 தான். ஆனால் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வியப்பளிக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடி இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து இங்கும் ரன் குவிக்கிறார். இது அவரது 3-வது சர்வதேச போட்டி தான். கைதேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ஆட்டத்தை நன்கு புரிந்து செயல்படுகிறார். அவர் தொடர்ந்து இதேபோல் விளையாடி நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று நம்புகிறேன்."

இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.


Next Story