யாரும் எம்.எஸ். தோனியாக முடியாது.. ஜூரெல் பற்றிய கருத்துக்கு கவாஸ்கர் விளக்கம்


யாரும் எம்.எஸ். தோனியாக முடியாது.. ஜூரெல் பற்றிய கருத்துக்கு கவாஸ்கர் விளக்கம்
x
தினத்தந்தி 3 March 2024 7:54 AM GMT (Updated: 3 March 2024 8:17 AM GMT)

துருவ் ஜூரெல் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டி இருந்தார்.

மும்பை,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்த தொடரின் 3-வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜூரெல் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதை விட அப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டி இருந்தார். ஆனால் அதற்கு துருவ் ஜூரெல் திறமையான வீரராக இருந்தாலும் அனைவராலும் எம்.எஸ். தோனியாக முடியாது என்று கங்குலி போன்ற சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் துருவ் ஜூரெல் பற்றிய தம்முடைய கருத்தை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் யாரும் எம்.எஸ். தோனியாக முடியாது என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"துருவ் ஜூரெல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சிந்தித்து பேட்டிங் செய்வது எம்.எஸ். தோனியை போன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது. அவர் ஓவருக்கிடையே சிக்சர் அடித்து பின்னர் சிங்கிள், டபுள் ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுகிறார். அதேபோல பென் டக்கெட்டை ரன் அவுட் செய்ததிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த கேட்சை அபாரமாக பிடித்ததிலும் அவருடைய விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்தது.

அவருடைய வயதில் எம்.எஸ். தோனியும் அதுபோன்ற சூழ்நிலையில் இதே விழிப்புணர்வுடன் செயல்பட்டார். அதனாலேயே தோனிபோல ஜூரெல் செயல்படுவதாக நான் கூறினேன். ஆனால் யாரும் எம்.எஸ். தோனியாக முடியாது. இங்கே ஒரே ஒரு தோனிதான் இருப்பார். ஆனால் தோனி செய்த பல்வேறு சிறப்பான வேலைகளில் துருவ் ஜூரெல் ஒன்றை செய்தால் கூட அது இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தானதாக அமையும்" என்று கூறினார்.


Next Story