ஓய்வு பற்றி யோசிக்கவில்லை; நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் - ரோகித் சர்மா


ஓய்வு பற்றி யோசிக்கவில்லை; நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் - ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் செயல்பட உள்ளார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா சாதாரண வீரராக விளையாடி வருகிறார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் செயல்பட உள்ளார். அதுவே இந்தியாவின் கேப்டனாக அவருக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் ஐ.சி.சி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா 2023 ஆசிய கோப்பையை மட்டும் வென்றது. அதை தவிர்த்து 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

மேலும் விரைவில் 37 வயதை தொடும் ரோகித் சர்மா இன்னும் ஓரிரு வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றி காண்பதே தம்முடைய லட்சியம் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, ஓய்வு பற்றி உண்மையாக நான் நினைக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கே எடுத்துச் செல்லும் என்பது தெரியாது. தற்போதைய நிலையில் நான் நன்றாக விளையாடுகிறேன். எனவே இப்படியே இன்னும் சில வருடங்கள் விளையாடுவதைப் பற்றி நான் நினைக்கிறேன். உண்மையாக நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்.

அத்துடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியும் நடைபெற உள்ளது. அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை 50 ஓவர் உலகக் கோப்பை தான் உண்மையான உலகக் கோப்பை. சென்ற முறை அது எங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்றது. அதில் நாங்கள் இறுதிப்போட்டி வரை நன்றாக விளையாடினோம்.

அரையிறுதியில் வென்ற போது கோப்பையை வெல்வதற்கு ஒரு படி மட்டுமே இருப்பதாக நான் நினைத்தேன். எந்த ஒரு விஷயம் உலகக் கோப்பையில் எங்களை தோல்வியடைய வைத்தது? அதில் தவறாக சென்ற ஒரு விஷயம் கூட எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பிய நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். இறுதிப்போட்டியில் நாங்கள் மோசமாக விளையாடியதாக தெரியவில்லை. ஆனால் அது மோசமான நாளாக அமைந்தது. அதே சமயம் ஆஸ்திரேலியா எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story