நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் - தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்


நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் - தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 18 Sep 2023 7:42 AM GMT (Updated: 18 Sep 2023 8:07 AM GMT)

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறியதாவது,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன். தற்போது நான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் கவனம் வைத்து அப்படியே பந்துவீசி வருகிறேன்.

மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன். இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோகித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது.

எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story