இம்ரான் கானின் 'டக் அவுட்' சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
ஹம்பன்டோட்டா,
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்களில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும். இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இது கேப்டனாக 2-வது முறை ஆகும். இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் மோசமான டக் அவுட் சாதனையை சமன் செய்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் வாசிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தற்போது பாபர் அசாம் 4-வது இடத்தில் உள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.