டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்
x

Image Courtesy : @TheRealPCB twitter

பாகிஸ்தான் அணி 24 புள்ளிகளை பெற்று மொத்தம் 100 சதவீத புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

கொழும்பு,

இலங்கை-பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 166 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 4-வது நாளில் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் சேர்த்து 'டிக்ளேர்' செய்தது.

இதைத் தொடர்ந்து 410 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 67.4 ஓவர்களில் 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது. அதே சமயம் உள்நாட்டில் இலங்கையின் மோசமான தோல்வியாகவும் பதிவானது.

இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. இரு டெஸ்டிலும் வாகை சூடிய பாகிஸ்தான் 24 புள்ளிகளை பெற்று மொத்தம் 100 சதவீத புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 66.67 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 54.17 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இரு டெஸ்டிலும் தோற்ற இலங்கை இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.


Next Story