இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 3 பேர் போட்டி


இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 3 பேர் போட்டி
x

இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவர் தவற விடுகிறார். இதே போல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் விளையாடுவது சந்தேகம் தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ரன் குவிப்பில் மிரட்டும் 25 வயதான ரிஷப் பண்ட் முக்கியமான தொடரில் விளையாட முடியாமல் போவது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். அத்துடன் புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்திய தேர்வு கமிட்டிக்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இரண்டு புதிய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்வது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும். அவரது இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியின் மாற்று விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை பொறுத்தவரை தொடர்ச்சியாக முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. அதனால் கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.


Next Story